“தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதலமைச்சராக்க முடியாது”- திருமா
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமானது சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் வரும் போகும், ஆனால் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதலமைச்சராக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கூறுவது SC, ST மக்களுக்காக அல்ல, OBC மக்களுக்கான தரவுகள் இல்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு OBC மக்களுக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலித் சமூகத்தில் மட்டுமல்ல மொத்தமாக எந்த சமூகத்திலும் ஆணவக் கொலைகள் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை. பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும். ஜனநாயகத்தை பற்றி விசிகவிற்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம். அதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள். சாதிய உள்நோக்கத்துடன் யாரும் என் பின்னால் வரவேண்டாம். இதனை நான் 1996 ம் ஆண்டே சொல்லிவிட்டேன்.
பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும், வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும். கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் சொன்ன கருத்துக்களை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.