×

"ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு.." என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்- திருமா

 

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசிக நடத்தும் பூரண மதுவிலக்கு மாநாட்டில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அவசியமானது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு.. என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாடு அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாகவும், ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சரை இதற்காக பாராட்டுகிறேன். அரசமைப்பு சட்டம் உறுப்பு எண் 47-ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை ஒன்றிய அரசு வரையறுக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை நடைமுறைபடுத்த வேண்டும். மதுவிலக்கு தொடர்பான பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மதுக்கடைகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு வேறு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்” எனக் கூறினார்.