×

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு- திருமாவளவன்

 

ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு, என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பழனியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வருகை தந்தார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார். திருமாவளவனுக்கு பழனி போக ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்று பிரசாதங்களை வழங்கினார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ  அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள், ஆதார்வ் அர்ஜுனா அவருடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் என்பது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மக்கள் கொடுக்கும் அங்கீகாரம். ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக ஆதாரங்கள் இருப்பின் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓசூரில் வழக்கறிஞர் படுகொலை மற்றும் ஆசிரியை படுகொலை ஆகியவை எதிர்பாராமல் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற துயர் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்ற ஆணை என்பதை காரணம் காட்டி பழனி மலை அடிவாரத்தில் வியாபாரிகள் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது, பழனி மேற்க ரத வீதியில் அருந்ததியர் சமூகத்திற்கு சொந்தமான மடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளேன். அப்படி என்றால் நானே முதல்வர் நாற்காலியில் சென்று அமர வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும்” என்றார்.
...