மது விலக்கில் திமுகவுக்கும் உடன்பாடு - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து மகளிர் மற்றும் விசிக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விசிகவின் மாநாட்டில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். மகளிரை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய திருமாவளவன், “மது விலக்கில் திமுகவுக்கும் கொள்கை அடிப்படையில் உடன்பாடு உள்ளது. திமுகவை நிறுவிய அண்ணா மது விலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீட்டை வழங்க வேண்டும் என கலைஞர் கருணாநிதி வலியுறுத்தினார். மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல, மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம் சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல, பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ளன. ஆனால் 2026 தேர்தலுக்கு இப்போதே அடிபோடுகிறோம் என இந்த மாநாட்டின் நோக்கத்தை மடைமாற்றினார்கள். மதம், ஜாதியை ஒரு மாநிலத்திற்குள் பார்க்க முடியாது. தேசிய அளவில் பார்க்க வேண்டும். அப்படிதான் மது ஒழிப்பை பார்க்க வேண்டும். மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விசிகவின் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல். இந்த மாநாடு அகில இந்திய அளவில் அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு. ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு. அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது” என்றார்.