×

வேளாங்கண்ணி பேராலய திருவிழா: அலைமோதும் மக்கள் கூட்டம்.. 

 

உலகப் புகழ் பெற்ற நாகை வேளாங்கண்ணி தேவாலய பெருவிழா கொடியேற்றம் இன்று மாலை நடக்க உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்றது. காரணம் இந்த ஆலயத்தில் ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, குழந்தை ஏசுவுடன் காட்சி தருவார். இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது , வெளி மாநிலங்கள் மற்றும்  வெளி நாடுகளில் இருந்து  பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வர். சாதாரண நாட்களிலேயே மக்கள் கூட்டத்துடன் காணப்படும் வேளாங்கண்ணியில் , திருவிழா என்றால் கூட்டத்தை பற்றி சொல்லவா வேண்டும். 

 

ஆண்டுதோறும் நடைபெறும் ஆரோக்கிய மாதா பெருவிழா இன்று (  ஆகஸ்ட் 29ம் தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கொடியேற்றத்தைக் காண ஏராளமான மக்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. செப்டம்பர் 7ம் தேதி இரவு 7.30 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. 

இந்த திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கின்றன. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சுமார் 2,500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், வேளாங்கண்ணிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் , ரயில்களும் இயக்கப்படுகின்றன.