×

விழுப்புரம்: கலைஞர் உரிமைத் தொகை முகாம்.. வதந்திகளை நம்பி ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு..  

 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம் நடைபெறுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஒரு கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில் அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். 

அந்தந்த பகுதிகளில் முகாம் நடத்தப்பட்டும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் புதிய பயனாளார்கள் இணைக்கப்பட்டு வரும் நிலையில், விழுப்புரத்தில் சிலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்திகளை பரப்பியுள்ளனர். அதாவது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று ( ஆக.17) முதல் திங்கள் கிழமை ( ஆக.19) வரை 3 நாட்களுக்கு  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முகாம் நடத்தப்படுவதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

முகாம் நடத்தப்படுவதாக வாட்ஸ் அப்-ல் பரவும் தகவலை உண்மை என நம்பி, ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.