×

விநாயகர் சதுர்த்தி விடுமுறை:  இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. 

 

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை  ஒட்டி சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று  ( வியாழன்) மற்றும் நாளை ( வெள்ளிக்கிழமை) (செப்.5, 6) முகூர்த்த நாட்கள், செப்.7 சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை  முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று  (செப்.5) முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை பல்வேறு ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.   

அதன்படி இன்று ( செப்டம்பர் 5 ) முதல் கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதலாக 725 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து  190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு  திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்தவகையில் செப்.5, 6, 7 அகிய தேதிகளில்  கிளாம்பாக்கத்தில் இருந்து 1,030 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளும் என 4 நாட்களுக்கு  2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியனை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.