×

“எப்போதும் லத்தியுடன் இருங்கள்”... போலீசாருக்கு விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அறிவுரை

 

விருதுநகர் மாவட்டத்தில் பணியில் உள்ள காவலர்கள் கட்டாயம் லத்தியை வைத்திருக்க வேண்டும்  என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கண்ணன் தெரிவித்துள்ளார்.


அருப்புக்கோட்டையில்  கடந்த செவ்வாயன்று  பெண் டி.எஸ்.பி,யின் தலைமுடியை பிடித்து தாக்கினர். இதில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவல்துறையினரும் கையில் லத்தி இல்லாமல் இருக்கக்கூடாது. பாதுகாப்பு பணிக்கு வரும்போது கையில் லத்தி இல்லாமல் போலீசார் யாரையாவது பணியில் பார்த்தால், அவர் மீது உடனே பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பிரச்சனை நடைபெறும் இடத்தில் வெறும் கையோடு பேசுவதற்கும், கையில் லட்சியோடு பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

குறிப்பாக பீட் போலீஸ், பந்தோஷ் போலீஸ் மற்றும்  பணியில் இருக்கும் எல்லா போலீசும் நான் பார்க்கும்போது கையில் லத்தியில்லாமல் இருக்கக்கூடாது. இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்க வேண்டும். ஆகையால் அனைத்து டிஎஸ்பியும் ரோல் காலில் கட்டாயம் லத்தி கொண்டு வருவதற்கு போலீசை அறிவுறுத்த வேண்டும் என்றார். மேலும், சீருடையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் காவலர்கள், கட்டாயம் தலைக்கவசம்  அணிந்து தான் செல்ல வேண்டும். நானே சாலையில் போகும்போது தலைக்கவசமின்றி பார்த்தால் உடனே அபராதம் விதிக்கப்படும் என்றார். மேலும், டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் இரவு ரோந்து பணியில்  ஈடுபடும்போது கட்டாயம்  ஒரு காவலருடன் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.