×

6 மாத குழந்தை வைத்திருப்பவரா நீங்கள்? அப்ப உடனே இந்த முகாமை பயன்படுத்திக்கொங்க...

 

ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இந்த ஆண்டு ஜீலை 1 முதல் ஆகஸ்டு 31 வரை நடைபெறவுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள். பள்ளிகள் மற்றும் நகரத்தை சுற்றி சிறப்பு கவனம் செலுத்தக் கூடிய முக்கிய இடங்களில் வைட்டமின் A திரவம் வழங்கும் முகாம் இந்த ஆண்டு ஜீலை 1 முதல் 31ம் தேதி வரை (புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை நீங்கலாக) நடைபெறவுள்ளது.

வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமின் இலக்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை முற்றிலும் தடுப்பதாகும். இந்த முகாமிற்காக பயனாளிகள் அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகும். நமது மாவட்டத்தில் 2,46,848 குழந்தைகளுக்கு வைட்டமின்- A திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமின் போது அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு ORS பொட்டலங்கள் மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் விநியோகிப்பர். கிராம/நகர்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ORS கரைசல் தயாரிப்பு தொடர்பான செயல் விளக்கத்தினை கிராம அளவில் நடத்துவர். மேலும் அனைத்து பள்ளிகளிலும் கை கழுவுதல் குறித்து செயல் விளக்க கூட்டம் கிராம/நகர சுகாதார செவிலியர் நடத்துவர். அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்களில் ORS துத்தநாக மாத்திரை காட்சிபடுத்தப்படும்.

வைட்டமின்-A திரவம் வழங்குவதின் மூலம் வைட்டமின்-A குறைபாட்டினால் ஏற்படும் பார்வை குறைபாடு, வயிற்றுப்போக்கு, தீவிர சுவாச தொற்று போன்றவை தடுக்கப்படுவதால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறப்பது தடுக்கப்படுகிறது. இந்தியாவில் வைட்டமின்-ஏ குறைபாடு பாதிப்பு உள்ளவர்கள் 17.54% ஆகும். தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ குறைபாடு பாதிப்பு உள்ளவர்கள் 7% சதவீதம் ஆகும்.

வைட்டன்-ஏ திரவம் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான 2,30,924 குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் 01072024 முதல் 31.07.2024 வரை (புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறுகிறது. வைட்டமின்-ஏ திரவம் 6 மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1மி.லி(1,00,000 I.U) அளவும் 12 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி(2,00,000 IU) அளவும் இந்த முகாமின் போது வழங்கப்படும்.

எனவே, பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் வைட்டமின் A திரவம் கிடைப்பதை உறுதி செய்து, மேற்கண்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.