திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் - சசிகலா ஆவேசம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடவுளை தரிசிக்க ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. ஸ்ரீ முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்த திருத்தலம். இங்கு ஒவ்வொரு நாளும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், தற்போது கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்றைக்கு நடப்பதையெல்லாம் பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது.
அதாவது திருச்செந்தூரில் கடவுளை தரிசிக்க ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், திருச்செந்தூர் கோயிலில் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் விஸ்வரூப தரிசன கட்டணம் இது நாள் வரை 100 ரூபாயாக ஆக இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சுவாமி அபிஷேக தரிசனத்திற்கு முந்தைய கட்டணம் 500 ரூபாயாக இருந்தது. அதனை தற்போது 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமையிலான அரசு அறிவித்துள்ளதால், சாமானியர்கள் கடவுளை தரிசனம் செய்ய வழியின்றி மிகவும் வேதனையில் இருக்கின்றனர். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் வாக்களித்த மக்களிடமிருந்தே பல்வேறு வழிகளில் பணத்தை வசூலிப்பதை ஒவ்வொருநாளும் கண்கூடாக பார்க்கமுடிகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவதாக சொல்லி மக்களிடம் வழிப்பறி செய்வது, அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ரூபாய், 10 ரூபாய் என வசூலிப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை அடிப்பது, ஏழை, எளியவர்கள் தங்கள் வயிற்று பிழைப்புக்காக சாலை ஓரத்தில் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்பவர்களிடம் மாமூல் வசூலிப்பது என்று பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து சுரண்டபடுவதை ஒவ்வொருநாளும் பத்திரிகை மூலமாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன.