×

சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்

 

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது 63 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஆண்டிற்கு இருமுறை அதாவது ஏப்ரல் 1ஆம் தேதியும், செப்டம்பர் 1ஆம் தேதியும் சுங்கக்கட்டண உயர்வை அமல்படுத்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் கங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோன்று தற்போது 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை உயர்த்தி, அது இன்று இரவு முதல் நடைமுறைக்கு வர இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதாவது இதுவரை இருந்த சுங்கக்கட்டணத்தை விட குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 உயர்த்தப்படுவதாக தெரியவருகிறது. வரை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் இதேபோன்று சுங்கக்கட்டண உயர்வு ஏற்பட்டபோது ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரை அழைத்து பேசி கட்டண உயர்வை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுங்கக்கட்டணம் குறைக்கப்பட்டது என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் ஏற்கனவே காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வை தாங்கிக்கொள்ளமுடியாமல் ஏழை, எளிய சாமானிய மக்கள் மிகவும் துன்பப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சுங்கக்கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் இருப்பதால், ஏழை எளிய சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்படைகின்ற சூழல் ஏற்படக்கூடும் என்பது மிகவும் கவலை அளிக்கிறது. தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ.132 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதிலும், குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே, நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலையில் தற்போது அமல்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

எனவே, தமிழகமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் உள்ள சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும். நிலையில், தன்னிறைவு எட்டிய சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுத்திட வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று, தமிழக ஆட்சியாளர்களும் இதற்கு தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டு சுங்கக்கட்டண உயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.