×

 ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.. 

 

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து , கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் கே.எஸ்.ஆர் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணை இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  ஆகையால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால், தண்ணீர் திறப்பும் குறைந்து, நீர் வரத்தும் குறைந்தது.  இந்தச் சூழலில் வியாழக்கிழமை முதல்  கே.எஸ்.ஆர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனையொட்டி 2வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியது.  

இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி 2 அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேல் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.  நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு நீர்மட்டம் 95.06 அடியாக நிலையில் இன்று காலை மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,20,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது  தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு  1,30,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.  இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளை தொட்டவாறு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.  

இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில், ஆற்றோரம் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான ஆற்றோரப் பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.