×

மேட்டூர் அணையிலிருந்து 27ம் தேதி முதல் பாசனம் அமல் - நீர்வளத்துறை உத்தரவு.. 

 

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு  27ம் தேதி முதல் முறை பாசனத்தை அமல்படுத்த நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.  இதன்படி, முதல் 6  நாட்கள் வெண்ணாறிலும், அடுத்த 6 நாட்கள் காவிரியிலும் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 இதுகுறித்து நீர்வளத்துறை 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2024-2025 ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜீலை-28 ஆம் தேதி மாலை 03.00 மணியளவில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லணையிலிருந்து ஜீலை-31 ஆம் தேதி காலை 9:15 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது, தற்போது அனைத்து உப ஆறுகளிலும் கடைமடைவரை நீர் சென்றடைந்து விவசாய பெருங்குடிமக்கள் விவசாய பணிகளை டெல்டா பகுதிகளில் தொடங்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 

ஜீலை -28 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.76 அடியாகவும் நீர் இருப்பு 79.493 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில் இருப்பில் இருக்கும் தண்ணீரை பாசனத்திற்கு தங்குதடையின்றி வழங்கபட்டு வந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீரியிருப்பினை கருத்தில் கொண்டு நீர்பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பெருங்குடி மக்கள் பயிர்கள் சாகுபடி சிறந்த முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளவும், நீர் பங்கீட்டினை முறைப்படுத்தவும் கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்படுகிறது.

மேலும், 25.09.2024 காலை 8.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாகவும் நீர் இருப்பு 64.569 டி.எம்.சியாகவும் உள்ள சூழ்நிலையில் மேட்டூர் அணையில் தினமும் 15,000 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீரியிருப்பினை கருத்தில் கொண்டு தற்போது எடுக்கப்பட்டுவரும் 15,000 கனஅடியிலிருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்து 27.09.2024 மாலை 6.00 மணி முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்தவும், முதல் ஆறு நாட்கள் வெண்ணாற்றிலும் அடுத்த ஆறு நாட்கள் காவிரியிலும் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாயில் மேற்பகுதி முறை, கீழ்பகுதி முறை என்று முறைவைத்து தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பயிர் சாகுபடியில் எந்தவித இடையூறும் இல்லாது பாசனவசதி அளிக்கப்படவேண்டும் என்றும் பருவமழை கிடைக்கப்பெறின் அதற்கேற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள் என்றும் விவசாயப் பெருங்குடிமக்களுக்கு அன்புடன் தெரிவிப்பதுடன், நீரினை  சிக்கனமாக பயன்படுத்து நீர்வளத்துறையின் நீர்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.