×

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நாங்கள் உடன்படவில்லை: வன்னி அரசு!

 

தனியார் தொலைக்காட்சி ஒன்றியிடம் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, “வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது எனது தலைவர் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கான அடித்தளம். கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வழிகாட்டுதலோடு எப்போதும் குரல் கொடுக்கும். அதிமுகவை பொறுத்தவரை அதனை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த தேர்தலில் திமுக 37 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் அதிமுகவோ 33 சதவீத வாக்குகளை பெற்றது. வரும் தேர்தலில் கூட்டணி, பிரச்சார வியூகங்களை வகுத்தால் வெற்றி பெரும். அந்தளவுக்கு அக்கட்சியின் அடிப்படை கட்டமைப்பு உள்ளது. இங்கு யாருமே பெரிய கட்சி கிடையாது. தமிழகத்தில் நாங்கள் தான் பெரிய கட்சி என்று கூறுபவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நின்றது போல தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று இருக்கலாம். கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக ஜெயித்து இருக்க முடியாது. திருமாவளவனுக்கு மட்டுமல்ல, கே பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோருக்கும் உரிய பொறுப்பும், பதவியும் கொடுக்க வேண்டும்” என பேசினார்.

அவரது இந்த பேச்சு திமுக- விசிக இடையேயான கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதைப் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. சில விசிக தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக மறைமுகமாக கருத்து கூறி வருகின்றனர். ரவிக்குமார், ஷா நவாஸ் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் திமுகவுடன் தான் கூட்டணி, அதனை உடைப்பது போல் பேசுபவர்களின் பேச்சை கேட்கக் கூடாது என கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆதாவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நாங்கள் உடன் படவில்லை என கூறியிருக்கிறார் விசிக துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆதாவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நாங்கள் உடன்படவில்லை. தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடித்திருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும், திமுக உடன் தான் கூட்டணி. எழுச்சித் தமிழர் தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. வேறு எந்த நிறுவனத்தாலும், எந்த தனிநபர் முயற்சியாலும் விசிக வெற்றி பெறவில்லை. ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விசிக வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றதை போன்று போலியான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார் ஆதவ் அர்ஜுன்.

மேலும், கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக, உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. அவற்றின் வாக்குகளாலும் தான் விசிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இன்று திமுக ஆட்சியில் இருப்பதற்கு விசிக மற்றும் மத்த கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் முக்கிய காரணம். நாங்கள் கட்சி ஆரம்பித்ததின் நோக்கம் திருமாவை முதல்வர் ஆக்கத்தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.