×

"மொழிப்போர் தியாகிகளுக்கு  தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம்" - தினகரன் 
 

 

மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருகின்ற 25ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம் என்று  தினகரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாய்மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் இந்தியாவின் பன்முகத்தன்மை ஆட்சிக்கு சவாலாக இருந்த இந்தித் திணிப்பை எதிர்த்திடவும் நடைபெற்ற மொழிப்போரில் பங்கேற்று தங்களின் உயிரை துறந்து தமிழ்மொழியை காத்திட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருகின்ற 25.01.2024 (வியாழன்கிழமை) தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம்.

கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டமும், மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட கழக செயலாளர்களுடன், மாணவர் அணி மற்றும் மாணவியர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், அந்தந்த வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் அன்னைத் தமிழ்மொழியைக் காத்து நின்றிடவும், நம் தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் அனைத்தையும் பெற்றுத்தந்திடவும், காலத்திற்கேற்ற வகையில் தமிழின் வளர்ச்சியை ஊக்குவித்திடவும் பாடுபட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.