விசிக மாநாட்டிற்கு முறையாக அழைத்தால் முடிவெடுப்போம் - விஜய பிரபாகரன்..
மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் முறையாக அழைத்தால் மேல் இடத்தில் பேசி கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்போம் என தேமுதிக விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் இம்மானுவேல் சேகரன் 67 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், “முதல்முறையாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் நினைவிடத்தில் வருகை தந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளேன்.
தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை அரசு விழா அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருக்கும்பொழுது அரசுக்கு பல்வேறு கட்ட கோரிக்கைகளை நாங்கள் வைத்திருந்தோம். இந்நிலையில் திமுக கட்சி அதனை நிறைவேற்றி உள்ளது. அதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறோம்.” என்றார்.
தொடர்ந்து திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு ஏதும் வந்துள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “திருமாவளவன் மாற்று கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இருந்தாலும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் கட்சி தலைமையில் பேசி மாநாட்டில் கலந்து கொள்வது கொடுத்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.