×

வீட்டு வாசல்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?- ஐகோர்ட்

 

சென்னை நகர் முழுவதும் வீட்டு வாசல்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில், என் பிளாக்கில், எந்த உரிமமும் இல்லாமல், தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் வாகனங்கள் நிறுத்தியுள்ளதாகவும், கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அண்ணாநகரைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளதாகவும், அந்த பகுதியில் நோ - பார்க்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.