×

என்ன நடக்கிறது தமிழகத்தில்...! பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மனிதராகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது என்பதற்கேற்ப, சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடங்களில் பயின்று, கல்வியினையும், ஒழுக்கத்தினையும் பெற்று வந்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை என்று சொன்னால் அது மிகையாகாது.

சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரத்தில் உள்ள பள்ளியில் பயிலும் ஒரு சிறுமியின் பிறந்தநாள் பீர் பாட்டிலுடன் கொண்டாடப்பட்டதாக பத்திரிகையில் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே ‘பீடி’ பிடிப்பதாகவும், ‘கூல் லிப்’ என்னும் போதைப்பொருள் அப்பள்ளியின் தரையில் சர்வசாதாரணமாக காணப்படுவதாகவும், இந்த போதைப்பொருள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்டு ஒரு பெட்டி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வட சென்னையில் உள்ள பல பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

மேற்படி பள்ளியில், பரிசோதனைக் கூடம் மற்றும் நூலகம் மூடப்பட்டு இருப்பதாகவும், பரிசோதனைக் கூடத்தில் புதிதாக வாங்கப்பட்டுள்ள மேசைகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், கணினி அறை அலங்கோலமாக இருப்பதாகவும், உயிரியல் பரிசோதனைக்கூட அறையில்தான் 12-ம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருப்பதாகவும், கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், மாணவர்களுக்கு குடிநீர் கூட இல்லாத அவல நிலை நிலவுவதாகவும், காக கொடுத்து குடிநீர் பருகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளியில் மிகப் பெரிய மைதானம் இருந்தும், விளையாட்டு ஆசிரியர் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததன் காரணமாக, மாணவ, மாணவியண விளையாட்டில் ஈடுபடுத்த முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” என்பதற்கேற்ப, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் இந்த அவல நிலைதான் நீடிக்கிறது. பள்ளிக்கூடங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம், பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவை இல்லை. அதே சமயத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி அறிவு பெற்றால், நாடு முன்னேற்றமடைந்து நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். ஆனால், இன்று பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இது தமிழ்நாட்டு இளைஞர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.