×

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது ?

 

ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழக இளைஞர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது ? - உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தீவிரப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்கு சாதகமான தீர்ப்பினை தமிழக அரசு பெற வேண்டும்.

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அண்மைக்காலமாக போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கும் அடிமையாகி பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர், காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரி மாணவர், கும்பகோணம் தனியார் விடுதி மேலாளர் என ஐந்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரப்படுத்துவோர் மற்றும் தொடர்புடைய விளம்பர நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு,  தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை போலவே பயனற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, இனியும் அலட்சியமாக செயல்படாமல் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவு படுத்துவதோடு, அவ்வழக்கில் வலுவான வாதங்களை முன்வைத்து ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.