×

தென் சென்னையில் ஜெயிக்கப் போவது எந்த "தமிழ்"?

 

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி,  விருகம்பாக்கம், தியாகராய நகர் , சைதாப்பேட்டை,  மயிலாப்பூர் , சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஆறு முக்கிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.  இந்த தொகுதியில் மொத்தம் சுமார் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர்.  

திமுக சார்பாக ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்,  பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் , அதிமுக சார்பில் ஜெயவர்தன் என பலத்த மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயப்பட்ட முகங்கள் ஆன இவர்களின் மும்முனைப் போட்டி இத்தொகுதியை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றுள்ளது.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை செய்து வருகிறார். அதே சமயம் மத்தியில் உள்ள  பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு போதிய நலத்திட்டங்களை செய்யாமல் வஞ்சித்து வருவதாகவும் அவர் தனது குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் பொதுக்கூட்டங்களிலும் தொகுதி பிரச்சாரங்களிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.  தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தமிழச்சி தங்கபாண்டியன் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அதிமுக வேட்பாளர்  ஜெயவர்தன்

அதிமுக சார்பில் களம்பிறக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 2014 முதல் 2019 ஆண்டு வரை தென் சென்னை தொகுதி எம்.பி., ஆக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.  அதே சமயம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை தென்சென்னை மக்களுக்காக திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எந்த ஒரு நலத்திட்ட உதவியும் செய்யவில்லை என்றும் அவர் தனது பிரச்சாரத்தில் அதிரடியாக கூறி வருகிறார்.

பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்

இந்த சூழலில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தென்சென்னை தொகுதியில் களமிறங்கியுள்ள தமிழிசை சவுந்தரராஜன் நடைப்பயணம்,  தொண்டர்கள் வாக்காளர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது இளைஞர்களுடன் கலந்துரையாடுவது,  மக்கள் கூறும் கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொள்வது என தொகுதியில் அதிமுக- திமுக வேட்பாளர்களை விட மிகவும் சுறுசுறுப்பாக வலம் வருகிறார்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் என தென் சென்னையின் பாஜகவின் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.  தமிழிசையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் செய்தார் என்பது கூடுதல் தகவல்.

இது தவிர நாம் தமிழர் கட்சியில் தமிழ்செல்வி களம் இறக்கப்பட்டு இருசக்கர வாகன பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  அவர் மத்திய மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி விவசாயி சின்னம் பறிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டதாக கூறி தனது பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார்.  இந்த சூழலில் தென் சென்னையை பொறுத்தவரை தமிழச்சி தங்கபாண்டியன் -  தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன் என இரு பெரும் பெண் ஆளுமைகள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்துள்ளது.