×

வெள்ளம் குறித்து வெள்ளை அறிக்கை..! - இபிஎஸுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி..

 

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த 2 நாட்களாக பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுடன்,  ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன.  இவை அனைத்தும் மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வரும் நிலையில்,  பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.  

அந்தவகையில் திருவல்லிக்கேணி -  சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை  வழங்கினார். தொடர்ந்து  500-க்கும் மேற்பட்டோருக்கு உடை, உணவுப் பொருட்களுடன் ஊக்கத் தொகையையும் வழங்கினார்.  அதன்பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றும் பெருமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், லேசான மழை தான் பெய்து வருகிறது  

மிக கனமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறோம்.  பெரு மழை நேரத்தில் உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி.   சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும் எனது  நன்றி..!” என்றார்.  

அப்போது  வெள்ளம் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ‘சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்’ என்று உதயநிதி பதிலடி கொடுத்தார்.