×

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுத்தது யார்? அதை மீண்டும் ரத்து செய்தது யார்? : ஜெயக்குமார்

 

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை அயோத்தி குப்பத்தில் ரௌடி வீரமணி என்பவரை என்கவுண்டர் செய்ததில் பிரபலமானார். இதேபோன்று கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரௌடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் காவல்துறையில் பேச்சு உள்ளது. இதனால் இவரை ‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’ என காவல்துறையினர் அழைப்பர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரௌடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக இருந்து வந்தார். இந்த நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ரௌடி ராமு என்கிற கொக்கி குமார் காவல்நிலைய மரணம் சம்பந்தமாக சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளத்துரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை ஒறு நாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதை ரத்து செய்து உத்தரவு வெளியானது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்ட பிறகே உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தான் இதுவரை முதல்வர் இருந்து வந்தார். இப்போது அவரது உள்துறையில் நடப்பது கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சென்னை உயர்நிதிமன்றம் ஓய்விற்கு ஒரு நாள் முன்னர்‌ துறை ரீதியான பணியிடை நீக்க நடவடிக்கை இருக்க கூடாது என அறிவுறுத்தியும்‌ ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுத்தது யார்? அதை மீண்டும் ரத்து செய்தது யார்? காவல்துறையை கைபொம்மையாக தூக்கி போட்டு‌ விளையாடுவது தான் அரசின் வேலையா? ஆழ்வார்பேட்டையிலேயே இருந்தால் ஆட்சி இப்படி தான் இருக்கும்! இந்த அரசு ஸ்டாலினுக்கு கீழ் இயங்கவில்லை என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.