×

பாஜக நிர்வாகி காவல்நிலையத்தில் தீக்குளிப்பு ஏன்?- காவல்துறை விளக்கம்

 

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பாஜக இளைஞரணி ஒன்றிய துணைத் தலைவர் தமிழ்செல்வன். இவரை கடந்த சில தினங்களாக பார்த்திபனூர் காவல் நிலைய போலீசார் அவர் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வந்துள்ளனர். அவர் காவல் நிலையத்திற்கு சென்று விளக்கம் அளித்தும் அதனை ஏற்காமல் அவர் மீது வழக்கு போடப் போவதாக போலீசார் தொடர்ந்து  மிரட்டியதால் நேற்று மாலை பார்த்திபனூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த தமிழ்செல்வனுக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழ்செல்வனை பாஜக மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பார்த்திபனூர் நல்லூரை சேர்ந்த தமிழ்செல்வம் தொடர்ச்சியாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இவர் மீது பார்த்திபனூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பாஜக ஒன்றிய இளைஞரணி துணை தலைவராக இருந்து வரும் தமிழ்செல்வம் அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் மாவட்ட அளவில் குற்றச்செயல்களில் ஈடுவோரை கண்காணிக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்செல்வத்தின் மீதுள்ள வழக்குகளை அடிப்படையாக கொண்டு அவருக்கு பிரிவு 110ன் கீழ் பரமக்குடி வட்டாட்சியர் மூலம் அழைப்பாணை சார்பு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த 4ம் தேதி எவ்வித வற்புறுத்தல், அச்சுறுத்தல் இன்றி தாமாகவே முன்வந்து, வரும் ஒரு வருட காலத்திற்கு எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என பிணை பத்திரம் எழுதி கொடுத்து சென்றார். இந்நிலையில் அன்று இரவு 8.45 மணிக்கு குடிபோதையில் வந்த தமிழ்செல்வம், பார்த்திபனூர் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தூரம் முன்பாக தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றவரை காவல்துறையினர் தடுத்து பரமக்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தமிழ்செல்வத்தின் நெற்றியில் சிறிய காயமே ஏற்பட்ட நிலையில் அன்றைய தினமே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் 5ம் தேதி பார்த்திபனூர் பைபாஸ் மூன்று முனை அருகே மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அன்று மாலை அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்” என விளக்கம் அளித்துள்ளனர்.