ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையேற்றம் ஏன்? தமிழக அரசு விளக்கம்
பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 31 இலட்சம் லிட்டர் பாலும் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பால் உபபொருட்களை விற்பணை செய்து வருகிறது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகள் மிகுந்த தரத்துடன், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதன் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு, நெய் மற்றும். வெண்ணெய் வகைகளின் உற்பத்தியை அதிகறிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நெய்யின் தற்போதுள்ள ஆயுட்காலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகறித்தவாறு இருப்பதாலும் மற்றும் உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை உயர்வு 14.09.2023 முதல் அமல்படுத்த இந்நிறுவனத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலையை விட ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தரமான ஆவின் பால் உபபொருட்களை பயன்படுத்தி சுமார் 4.5 இலட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.