இயந்திரத்தில் சிக்கிய முடி, ஆவின் பெண் ஊழியர் தலை நசுங்கி உயிரிழப்பு..
திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில், இயந்திரத்தில் முடி சிக்கியதால், தலை துண்டாகி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பால் பாக்கெட்டுகளை டப்பில் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், ரணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நாள் தோறும் 1.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர் காக்களூர் பால் பண்ணையில் பால் பதப்படுத்தப்பட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் பால் பண்ணையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்தவகையில் பால் பாண்ணையில் இயந்திரத்தில் முடி சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் பாக்கெட்டுகளை டப்பில் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒப்பந்த ஊழியர் உமா மகேஸ்வரியின் முடி இயந்திரத்தில் சிக்கியுள்ளது. தொடர்ந்து முடி சிக்கி இழுத்ததில் தலை நசுங்கி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.