×

 ‘சிறந்த இந்தியா’ உருவாக்குவதில் மகளிர் பங்கு முக்கியமானதாக இருக்கும் - நிர்மலா சீதாராமன் 

 

2047-ல் சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் மகளிரின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

சென்னை எம்.ஆர்.சி நகரில், இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு சார்பில் "மகளிர் எழுச்சி"  என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில்  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்று உரையாற்றினர். அப்போது பேசிய அவர், “3வது முறையாக நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இது என்னுடைய முதல் பொது மேடைப்பேச்சு. அரசின் கொள்கைகள் எதுவும் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது இல்லை. அது பட்டியலின சமூகம் சார்ந்த கொள்கை, மகளிர் சார்ந்தது என எதுவாக இருந்தாலும் தீவிர ஆலோசனைக்கு பிறகே தயாரிக்கப்பட்டது. பல்வேறு மகளிர் எழுச்சிக்கான திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்துள்ளார். கணினி மயமாக்கம் பாஜக அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. 2047 ல் சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் மகளிராகிய உங்கள் பங்கு முக்கியமானதாக இருக்கும். பெண்ணை பாதுகாக்க வேண்டும்,பெண்ணுக்கு கல்வி கொடுக்க வேண்டும். 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு உள்ள ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் 17 கோடி பெண்கள் பதிவு செய்துள்ளனர். 

சட்டத்துறையில் பெண்கள், 2 பெண் நீதிபதிகள் உள்ளனர்,106 பெண்கள் பல்வேறு நீதிமன்றங்களில்  நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர்.சென்னை உயர்நீதி மன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் 11.75 சதவீத பெண்கள் காவலராக உள்ளனர். இந்தியாவிலேயே மகளிருக்கு தமிழ்நாடு தான் முதன் முறையாக மகளிர் காவல் நிலையம் அமைத்தது. அது சரியாக செல்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், முதன் முறையாக தமிழ்நாடு தான் அமைத்தது என்பது குறிப்பிடதக்கது.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தற்போதைய காலத்தில் பெண்கள் முதலீடும் அதிகமாக செய்து வருகிறார்கள்.  Mutual fund ல் 2017 ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த மகளிர் பங்கு 2021 ஆம் ஆண்டு 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம், பாதுகாப்பு என அனைத்திலும் பெண்கள் தெளிவாக சிறப்பாக செயல்படுகின்றர். தொழில் தொடங்கும் பெண்களுக்கு 300 க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் இந்தியாவில் உள்ளது. அங்கு எவ்வாறு தொழில் தொடங்குவது, அரசு அதற்கு என்ன உதவி வழங்குகிறது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

விவசாயத்தில் ஆண்களை விட கடினமான பணிகளை பெண்களே செய்கின்றனர். உடலுக்கு வலி ஏற்படும் அதிக விவசாய பணிகளை பெண்கள் தான் செய்கின்றனர். ஆண்கள் வெறுமனே நின்றுகொண்டு உரத்தை வீசுகின்றனர். இன்று ட்ரோன் மூலம் உரமிட்டு  விவசாயம் செய்வது தொடர்பான பயிற்சிகள் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர்  கையில் பணத்தை கொடுத்துவிட்டு நான் பெண்களை முன்னேற்றம்  அடைய செய்கிறேன் என்று பிரதமர் சொல்லவில்லை. அதே நேரத்தில் பணத்தை தாண்டி பல்வேறு விசயங்களில் பெண்கள் மீது தங்கள் பார்வை திரும்பும் வகையில் மொத்த கிராமத்தின் மனநிலையும் மாற்றும் அளவிற்கு பிரதமர் பெண்களை முன்னேற்றம் அடைய செய்து வருகிறார். இந்த மாற்றத்தை தான் நான் பெருமையாக நினைக்கிறேன். அனைத்து துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். 8.83 லட்சம் பெண்கள் இந்தியாவில் நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 68 ஆயிரம் பெண்கள் உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. ஆனால் 33 சதவீதத்திற்கும் மேல் அதாவது 46 சதவீதம் பெண்கள் பஞ்சாயத்து தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  ஒரு முறை இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்களுக்கான கதவை திறந்து விட்டால் போதும் அவர்களே அதை பயன்படுத்தி வளர்ந்து வருவார்கள்.” என்று தெரிவித்தார்.