சனாதன தர்மம் குறித்த பேச்சு - அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஜெகன்நாத் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சிலவற்றை எதிர்க்க முடியாது, ஒழித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார் சனாதன மாநாட்டில் உதயநிதி பேசியது நாடு முழுவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.