×

மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்தீங்க.. இர்ஃபான் மீது எடுத்த நடவடிக்கை என்ன..? - அமைச்சர் மா.சு சொன்ன பதில்..!

 

மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ள போது இர்ஃபான் மீது எடுத்த நடவடிக்கை என்ன..? என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.  

பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.  பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து, கடந்த 19ம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது  சர்ச்சையாக வெடித்த நிலையில்,  இது மருத்துவ விதிகளின் படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.  


 
அதன் அடிப்படையில்  சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.  அத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதா மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த சென்னை ரெயின்போ மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த ஊரக நலப்பணிகள் இயக்ககம் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.  

இந்நிலையில், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ள போது இர்ஃபான் மீது எடுத்த நடவடிக்கை என்ன..? செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த  அமைச்சர் மா சுப்பிரமணியம், “யூடியூபர் இர்ஃபான் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும் இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.  அவருக்க்லு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடைபெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.