×

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!

 

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதுதொடர்பாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசபாபு, பேட்டி கொடுப்பவரை விட கேள்வி கேட்பவர்களை தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமென அதிரடியாக தெரிவித்து, முன்ஜாமீன் வழங்க மறுத்ததோடு, யூடியூப் சேனல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டார். இது குறித்து போலீஸ் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, டெல்லிக்கு பெலிக்ஸ் ஜெரால்டு தப்பி சென்றார். 

இந்நிலையில் 10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டு-ஐ கைது செய்தனர்.தொடர்ந்து அவரை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை 3 வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்டு அறிந்தபின் நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை காண வேண்டும் எனக் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் பின்னர் வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு நேற்று மதியம் விசாரணைக்காக பெலிக்ஸ் ஜெரால்டு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களே அவரை அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து சிறை வரை பெண் காவலர்களின் பாதுகாப்பில் பெலிக்ஸ் ஜெரால்டு இருந்தார். வெயில், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், இரவு ரோந்து பணியிலும் ‘கம்பீரத்துடன்’ பெண் காவலர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பெண் காவலர்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெலிக்ஸ் ஜெரால்டை முழு பாதுகாப்புடன் பெண் காவலர்கள் அழைத்து வந்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.