×

 ‘எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை..’ மீண்டும் மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்!

 


குழந்தையின் தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று வெட்டிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்ஃபான்  மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். 

பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.  பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து, கடந்த 19ம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது  சர்ச்சையாக வெடித்த நிலையில்,  இது மருத்துவ விதிகளின் படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.  அதேபோல்  பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதா மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில்  சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்நிலையில்அத்துடன்  யூடியூபர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த சென்னை ரெயின்போ மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த ஊரக நலப்பணிகள் இயக்ககம் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான்  மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். 

இர்ஃபான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் தனது தரப்பு வருத்தத்தை உதவியாளர் மூலமாக அளித்திருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அந்தக் கடிதத்தில் எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும்,  மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  வெளிநாட்டில் உள்ள இர்ஃபான் தமிழகம் திரும்பியதும் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அவரது உதவியாளர் மூலம் கடிதம் சமர்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.