‘வைரல் பிரியாணி தந்தை’க்கு யூடியூபர் இர்ஃபான் கொடுத்த அதிர்ச்சி.. நெகிழ்ச்சியில் குடும்பம்..
மகனுக்காக பிரியாணி போட்டியில் கலந்துகொண்ட தந்தைக்கு இர்ஃபான் உள்ளிட்ட யூடியூபர்கள் இணைந்து ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்திலேயே ஹோட்டல் ஒன்றில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோட்டலை பிரபலப்படுத்தும் வகையில் கடந்த வாரம் பிரியாணி சாப்பிடும் போட்டியை அந்த ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது . இதில் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் , 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு இரண்டாவது பரிசாக ரூ. 50,000 ரூபாயும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்குபெற்ற நிலையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இரண்டாம் இடம் பிடித்த கணேச மூர்த்தி.
ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் பங்கேற்றதாக கூறி கணேசமூர்த்தி கண்ணீர் மல்க பேசியது காண்போரை கரைய செய்திருந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் இவர் மகனின் மருத்து சிகிச்சைக்காக கோவையில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த செய்திகளும், இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வைரலானதை அடுத்து பலரும் அவருக்கு உதவ முன்வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரபல யூடியூபர் இர்ஃபான் கணேச மூர்த்திக்கு நிதியுதவி அளித்துள்ளார். யூடியூபில் உணவு ரிவியூவ் செய்து வரும் இர்பான் இது தொடர்பான வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மகனுக்கு 4வயதில் ஆட்டிசம் குறைபாடு இருந்தது தெரியவந்ததாகவும், நிறைய செலவு செய்து பல இடங்களில் சிகிச்சை அளித்து வந்ததாகவும் கணேச மூர்த்தி கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து அவரது மகன் மருத்துவ செலவிற்காக யூடியூபர் இர்ஃபான் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். இதில் Food Information யூடியூப் சேனல் சூர்யா ரூ. 10,000, peppa Foodie யூடியூப் சேனல் கணேஷ் ரூ. 5 ஆயிரமும், Idris Explores சேனல் இட்ரிஸ் ரூ. 5 ஆயிரம், Innaikku Enna Samayal சேனல் சுனிதா ரூ. 10,000 , DAN JR Vlogs சேனல் டேன் ஜே.ஆர் ரூ. 25,000 மட்டும் Irfan's View சேனல் சார்பாக 50,000 என மொத்தம் ரூ. 1,05,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.