போன் முழுக்க ஆபாச வீடியோ... சிறுமிக்கு மிரட்டல்- பிரபல யூடியூபர் சிக்கா மகன் கைது
புதுச்சேரியை சேர்ந்த பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூப்பர் சிக்காவின் மகனை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கின்றார். குறிப்பாக பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார். அவருடைய Instagram idக்கு, அறிமுகமில்லாத புதிய நபரிடமிருந்து ஒரு மெசேஜ் வருகிறது. அதைத்தொடர்ந்து இருவரும் மெசேஜ் அனுப்புவது வீடியோக்களை அனுப்புவதன் மூலம் நண்பர்களாக பழகி உள்ளனர். பழகிய 15 நாட்களுக்குள் மேற்படி நபர் சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அவருடைய அந்தரங்க வீடியோவையும் அனுப்பி வைத்து மிரட்டத் துவங்குகின்றார்.
பின்னர் போலீஸ் விசாரணையில் மேற்படி நபர் மதுரை சேர்ந்த அஷ்ரப்(24) என்பது தெரியவந்தது. இவர் பிரபல Youtubeரான சிக்கா மற்றும் சுமியின் மகன் ஆவார். மேலும் ரவுடிபேபி என்று அழைக்கப்படும் திருச்சி சூர்யா இவரின் சித்தி ஆவார். மேற்கண்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகார் சம்பந்தமாக புதுச்சேரி இணைவழி போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 15 நாட்களாக மேற்கண்ட சிறுமிக்கு ஆபாச வீடியோவை அனுப்பிய நபரை பற்றி விசாரித்து தேடி வந்தனர். தற்போது இணைய வழி காவல் நிலையத்தில் இருக்கின்ற நவீன மென்பொருள்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று இணைய வழி போலீசார் கண்டுபிடித்தனர். மேற்படி இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய மொபைல் எண்ணை கண்டுபிடித்த போலீசார் அது மதுரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் க்ஷ உத்தரவுப்படி ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படையினர் மதுரை விரைந்தனர். வீடியோ அனுப்பி இவரின் முழு விவரங்கள் தனிப்படை போலீசாருக்கு தெரியவரவே அவரை மதுரையில் கைது செய்து புதுச்சேரி இணைய வழி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது மற்ற அனைத்து விவரங்களும் போலீசாருக்கு தெரியவந்தது. சிறுமிக்கு ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டல் சம்பந்தமாக மேற்படி நபரை கைது செய்து தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி அஷ்ரப் மொபைலை ஆய்வு செய்தபோது அவர் பல்வேறு பெண்களுக்கு இது போன்ற ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா, சுமி ஆகியோர்களையும் விசாரிக்க புதுச்சேரி இணையவழி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது பற்றி இணையவழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பொதுமக்களுக்கும் இளம்பெண்களுக்கும் எச்சரிக்கை செய்வது என்னவென்றால் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது உங்கள் நம்பிக்கை கூறியவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும். 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் என்று அறிவுறுத்தினார்.