×

சங்கரய்யா மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்- விஜயகாந்த்

 

சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

1921 ஆம் ஆண்டு ஜூலை நெல்லையில் பிறந்த சங்கரய்யா தனது இளமைக்காலம் முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1986 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும்,  1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராகவும் பணியாற்றினார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரய்யா இன்று உயிரிழந்தார் .

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டவர், தமிழ் மாநில செயலாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.என்.சங்கரய்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.  அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தேமுதிக  சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.