மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் டிரெயின் 18 அறிமுகம்
நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்ட டிரெயின் 18 இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்ட டிரெயின் 18 இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே அதிவிரைவு ரயில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டிலேயே முதன்முறையாக, மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் 18 எனும் அதிவிரைவு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதால், இந்த ரயிலுக்கு டிரெயின் -18 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மின் வழித்தடத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ரயில், இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டு சோதனை ஓட்டத்துக்காக ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் சதாப்தி அதிவேகரயிலுக்கு மாற்றாக இந்த ரயில் 18 இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எஞ்ஜின் இல்லா ரயில் என வர்ணிக்கப்படும் இந்த ரயிலானது, சில மார்க்கங்களில் சோதனை ஒட்டத்துக்குப் பின் முதல்கட்டமாக பெருநகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயிலில் அனைத்து பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும். 16 பெட்டிகள் சேர்கார் வசதியுடனும், 2 பெட்டிகள் எக்சிக்யூட்டிவ் சேர் கார் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எக்சிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் சுழலும் வசதியுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1,128 இருக்கைகள் கொண்டதாகவும், குளிர்சாதன வசதி, வை-பை வசதி, ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன. நவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்பு கூடம் மற்றும் விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்துப் பெட்டிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் கதவுகளும், படிகளும் தானியங்கி முறையில் இயக்கப்படும். இந்த ரயிலின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஓட்டுநர் அறைகள் இடம்பெற்றுள்ளன. அழகிய உல் வடிவமைப்பு கொண்டுள்ள இந்த ரயிலில் அதிநவீன பிரேக்கிங் முறை பொருத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பயணித்தால் ஒரு விமானத்தில் செல்லும்போது எத்தகைய உணர்வு ஏற்படுமோ அது போன்ற ஓர் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள். இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப திறமைக்கு இந்த ரயில் எடுத்துக் காட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.