×

நிலவுக்கு ராக்கெட் - 5வது கட்ட முயற்சியில் நாசா 

 

நவம்பர் மாதம் நிலவுக்கு ராக்கெட் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.  ஐந்தாவது முயற்சியாக களமிறங்கி இருக்கிறது நாசா.   புயலால் இந்த திட்டம் தாமதமான நிலையில் மீண்டும் நவம்பரில் ராக்கெட் ஏவப்படும் என்று நாசா தெரிவித்திருக்கிறது.

 அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா.   கடந்த 1969 ஆம் ஆண்டில் முதன் முதலாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது நாசா.  இதன் பின்னர் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது நாசா.   தற்போது மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ஆர்டெமிஸ் - 1 திட்டத்தை துவங்கியிருக்கிறது.

 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறது நாசா.  இதன் முதல் கட்ட சோதனை முயற்சியாக ஆர்டெமிஸ் - 1  ராக்கெட் குறித்த ஆராச்சிக்காக அனுப்ப இருக்கிறது.   இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஓரியன் விண்கலத்தை சுமந்து செல்கின்றது.

 ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் - 1 ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு முறை ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.   கடந்த 27ஆம் தேதி அன்று மீண்டும் ராக்கெட் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது அன்றைய தினமும் ஒத்தி வைக்கப்பட்டது. 

இதை அடுத்து அக்டோபரில் மீண்டும் ராக்கெட்டை ஏவ நாசா திட்டமிட்டிருந்தது.  ஆனால் புயல் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் ஏவுதளத்தில் இருந்த ராக்கெட் கடந்த செவ்வாய் அன்று கென்னடி விண்வெளி மையத்தில் இருக்கின்ற சேமிப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.   ஃப்ளோரிடா மாநிலத்தின் சில பகுதிகளை புயல் அழித்தாலும் ராக்கெட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நாசா தெரிவித்திருக்கிறது .

இதனால் ராக்கெட் நவம்பர் மாதம் ஏவ நாசா திட்டமிட்டு இருக்கிறது.   320 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை மீண்டும் ஏவு தளத்திற்கு கொண்டு செல்வதற்கும் தயார்படுத்துவதற்கும் பல நாட்கள் ஆகும் என்பதால் நவம்பர் மாதத்தில் அது சாத்தியமாகும் என்று நாசா தெரிவித்து இருக்கிறது.