×

இலங்கையின் 9வது அதிபரானார் அநுர குமார திசநாயக..!

 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இலங்கையின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்றார்.  

இலங்கை  அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. இதில் அநுர குமார திசநாயக, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கே  உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்.  அது யாருக்கும் கிடைக்காததால்,  முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா  ஆகியோரது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.  

நேற்று 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் அனுர குமார திசநாயகே 55.89% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  இதனையொட்டி கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அநுர குமார இன்று ( செப்.23)  இலங்கையின் அதிபராக பதவியேற்றார்.  இதன்மூலம் அநுர குமார இலங்கையின் 9வது அதிபராகியுள்ளார்.  இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூர்ய, அநுர குமார திசநாயகேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசநாயக. 

இந்நிலையில், ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும் தேவை என்கிற முழக்கத்துடன் அவர் அதிபராகியுள்ளார்.  மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும்,  சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து புதிய எதிர்காலத்தை வடிவமைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.  அதிபராக பதவியேற்ற பின்னர் புத்த பிக்குகளிடம் அநுர குமார திசநாயக ஆசி பெற்றார்.