×

#BREAKING: ஹமாஸ் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். 

 

ஈரான் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். டெஹ்ரானில் உள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.  

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் இயக்கம்  கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான போர் மூண்டது.  பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தலைமையிடமாக கொண்டு ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வந்ததால், காசா மீது கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வந்தது.   இப்போரில் பாலஸ்தீனத் தரப்புக்கு பெரும் பாதிப்புகள்  ஏற்பட்டு உள்ளன. பாலஸ்தீனத் தரப்பில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ள நிலையில், 90,923 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.  


 
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே  கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்திருக்கிறது.  கடந்த 2017ம் ஆண்டு முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வரும்  இஸ்மாயில் ஹனியே, தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்திருக்கிறார். இதற்கு முன்பாக பலமுறை இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து தப்பித்து வந்தார்.  

 இருப்பினும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கிறார். ஈரானில் புதிய அதிபர் பதவியேற்க உள்ள நிலையில்,  இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக  இஸ்மாயில் ஈரான் வந்திருந்தார்.  ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அலுவலகத்தில்  இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இஸ்மாயில் மற்றும் அவருடைய மெய்பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ்  அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.   ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டிருப்பது இஸ்ரேல்-பாலஸ்தீன போரை தீவிரப்படுத்தியிருக்கிறது.