ஜோ பைடன் - டொனல்டு டிரம்ப் சந்திப்பு..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடனை சந்திக்க வெள்ளை மாளிகை வந்த டொனல்டு டிரம்பை, ஜோ பைடனும் அவரது மனைவியும் வரவேற்றனர். மேலும், பைடனின் மனைவி கையால் எழுதிய வாழ்த்து கடிதத்தையும் டிரம்பிடம் அளித்துள்ளார்.
மேலும், டிரம்பை வரவேற்ற பைடன், மீண்டும் வரவேற்கிறோம். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள், நாங்கள் சொன்னது போல் சுமுகமான மாற்றத்தை எதிர்நோக்குகிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் எனத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது:-
டிரம்ப், பைடனின் தேர்தலுக்கு பிந்தைய சந்திப்பு வெளியேறும் அதிபருக்கும், புதிதாக வரவிருக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் வழக்கமான நடவடிக்கை. அமெரிக்காவின் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் தொடக்கமாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
2020 ல் நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்ற போது, அதனை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறி வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார்.