×

தொடரும் வன்முறை வெறியாட்டங்கள்.. வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு.. 

 


வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.  

வங்கதேசத்தில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின்  வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அரசின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது  ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் மூண்டதோடு,  பல இடங்களில் வன்முறை வெடித்தது. இடஒதுக்கீட்டு சலுகையை 5% ஆக குறைத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும்,  நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலனில்லை.  வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பிரதமர் அலுவலகங்களை சூரையாடிய போரட்டக்காரர்கள்,  அத்துடன் வங்க தேசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் சிலையையும் உடைத்து தள்ளினர். 

 நாடு முழுவதும் நிலவிய உச்சகட்ட பதற்றம் காரணமாக  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ராணுவ ஆட்சி அமலாகியிருக்கும் நிலையில்,  முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அதிபர் முகமது சஹாபுதீன் அறிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் சென்றுள்ள அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும், பின்னர் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் முகமது யுனஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது.  இதுதொடர்பாக டாக்காவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராணுவ தளபதி வேகர்-உஸ்- ஜமான், இன்று(ஆக.8) பதவியேற்பு விழாவை நடத்த முழு முயற்சி எடுத்து வருவதாகவும், முகமது யூனுஸ்  மதியம் 2.10 மணியளவில் தான் நாட்டிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இடைக்கால அரசின் ஆலோசனை குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும், இடைக்கால அரசுக்கு ஆயுதப்படைகள் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் கூறினார். 

அதேநேரம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி 2 நாட்கள் ஆகியும், ராணுவம் பலக்கட்ட கோடிக்கைகளை முன்வைத்தும் அங்கும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. அவாமி லீக் கட்சியின் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் காவல் நிலையங்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட இந்த  வன்முறையால் 50 காவலர்கள் உள்பட மாணவர்கள் என 469 பேர்  இதுவரை உயிரிழந்துள்ளனர்.