வேட்பு மனுக்களை திரும்ப பெற்று, தேர்தல் களத்தில் பின்வாங்கிய வேட்பாளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கின்றன. அடுத்த முதல்வர் யார் என்பது விரைவில் தெரிய வந்து விடும். கடந்த 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளன. இது மாற்ற முடியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், இந்த முறை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாததால் அக்கட்சிகளின் தலைமை ஆட்டம் கண்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது கட்சியாக உருவெடுத்து தீவிர பரப்புரையை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டிக்களத்தில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார். தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலின் போது 7,255 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 2,806 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 450 பேருக்கும் மேல் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.