• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களைக்கட்டும் அண்ணா அறிவாலயம்!

kalaignar

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்காக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி காலமானார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் ஆசைப்படி பேரறிஞர் அண்ணா சமாதிக்கு அருகே அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதனையடுத்து, அவர் மறையும் வரை தலைவராக பதவி வகித்த திமுக-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் அண்ணா சிலை அருகே, கருணாநிதிக்கும் சிலை அமைப்பதென அக்கட்சியின் தலைமை முடிவெடுத்தது.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை செதுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நிறைவடைந்து, அவரின் சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சிலைகளும் வருகின்ற 16-ஆம் தேதியன்று திறக்கப்பட இருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், அரசியலைக் கடந்து கலைஞர் கருணாநிதிக்கென தனி மரியாதை இருப்பதால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்குபெற இருக்கிறார்கள். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அண்ணா அறிவாலயம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. 

             
2018 TopTamilNews. All rights reserved.