• July
    20
    Saturday

Main Area

Main



அண்ணா பல்கலை.,புதிய தேர்வு விதிகள்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

chennaihighcourt
chennaihighcourt
Loading...

சென்னை: அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் புதிய தேர்வு விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி முதல் பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் ஒரு மாணவர் தோல்வியடைந்தால், அந்த பாடத்திற்கான தேர்வை அவர் மூன்றாவது பருவத்தில் மட்டும் தான் எழுத முடியும். அதேபோல், எந்த பருவத் தேர்வில் ஒரு மாணவர் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்த பருவத்தில் அப்பாடத் தேர்வை அவரால் எழுத முடியாது. மாறாக ஓராண்டு கழித்து வரும் பருவத்தில் தான் அவர் தேர்வெழுத முடியும்.

உதாரணமாக நான்காம் ஆண்டின் முதல் பருவத்தில், அதாவது ஏழாவது பருவத்தில், ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர் எட்டாவது பருவத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டால் அவர் வரையறுக்கப் பட்ட 4 ஆண்டுகளில் படிப்பை முடித்து பட்டம் பெறுவார். ஆனால், புதிய விதிகளின்படி ஏழாவது பருவத்தில் தோல்வியடைந்த மாணவர், எட்டாவது பருவத்தில் தேர்வு எழுத முடியாது. மாறாக ஒன்பதாவது பருவத்தில் தான் தேர்வெழுத முடியும். அதுமட்டுமின்றி, ஒரு பருவத்தில் அதற்குரிய தாள்களுடன், கடந்த காலத்தில் தோல்வியடைந்த  தாள்களில் அதிகபட்சமாக 3 தாள்களை மட்டும் தான் கூடுதலாக எழுத முடியும்.

இதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்,  இந்த புதிய விதிகளுக்கு எதிராக திருச்சியை சேர்ந்த கார்த்தி என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு விதிமுறை குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

2018 TopTamilNews. All rights reserved.