• April
    25
    Thursday

Main Area

Main



நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

supremecourt
supremecourt
Loading...

புதுதில்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் எனும் இடத்தில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அரசின் நிதியுதவிடன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்தது. இதனிடையே, இந்த காப்பகத்தில் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில், அங்கு தங்கியிருந்த 7 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், இதை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணை கொலை செய்து அந்த வளாகத்திலேயே புதைத்ததும் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் காப்பக ஊழியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் பதவி வகித்த போது, சில அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இதில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த ஏகே சர்மாவும் அடங்குவார். ஏ.கே.சர்மாவை தொழில்பாதுகாப்பு படைக்கு இடமாற்றம் செய்தார் நாகேஸ்வர ராவ்.

இவரது இடமாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏகே சர்மாவை இடமாற்றம் செய்தது ஏன்? இடமாற்றம் குறித்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என சரமாரி கேள்விகளை எழுப்பியது.

அத்துடன் சிபிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இடமாற்றம் செய்யக்கூடாது என்ற உத்தரவை மீறி அதிகாரி மாற்றப்பட்டது குறித்து சிபிஐ விளக்க வேண்டும். நீதிமன்றத்திடம் ஆலோசிக்காமல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு முகாந்திரம் உள்ளது. எனவே, நாகேஸ்வர ராவ் பிப்ரவரி 12-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நாகேஸ்வர ராவ் இன்று ஆஜரானார். அப்போது இந்த செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாக நாகேஸ்வர ராவ் சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சிபிஐ இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், நீதிமன்ற அலுவல் முடியும் வரை அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குனராக இருந்த ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சிபிஐ வரலாற்றில் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.