வர்த்தக துளிகள்.. ரூ.6 லட்சம் கோடியை நெருங்கிய நிகர நேரடி வரி வசூல்

 
நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். நடப்பு 2023-24 நிதியாண்டில் இதுவரையிலான காலத்தில் (ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை) இந்தியாவின்  நிகர நேரடி வரி வசூல் ரூ.5.84 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 17.3 சதவீதம் அதிகமாகும்.

தொழில்துறை

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜூன்  மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு  3.7  சதவீதமாக குறைந்துள்ளது. 2023 மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி  5.3 சதவீதம் வளர்ச்சி (திருத்தப்பட்ட)  கண்டு இருந்தது. 2023 ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.2 சதவீதமாக இருந்தது.

கச்சா எண்ணெய்

உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு ரஷ்யாவில் இருந்து நம் நாடு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ரஷ்யா கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி வழங்கியதை இதற்கு காரணம். உலக சந்தை எண்ணெய் சந்தை விலைக்கும், ரஷ்யா கச்சா எண்ணெய் விலைக்கும் சுமார் 20 டாலர் (பேரலுக்கு) வித்தியாசம் இருந்தது. தற்போது கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடியை ரஷ்யா குறைத்து விட்டது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் திட்டம் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஏனென்றால் ரஷ்யா தள்ளுபடியை குறைத்ததாலும் அங்கிருந்து இறக்குமதி செய்வது ஆதாயமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அரிசி

ஐ.ஆர். 64 போன்ற பாஸ்மதி அல்லாத புழுங்கல் அரிசியின் விலைகள் கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 12 சதவீதம் உயர்ந்துள்ளன. ஏனெனில் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா  போன்ற சந்தைகள் தங்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து இந்த வகை அரிசியை பெருமளவில் வாங்குகின்றன. கச்சா, வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த மாதம் மத்திய அரசு தடை விதித்தது. புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கும் இந்தியா தடை விதிக்கலாம் என்று அச்சம் சர்வதேச இறக்குமதியாளர்களிடம் எழுந்துள்ளது.