வர்த்தக துளிகள்.. ஒரே நாளில் ரூ.846 குறைந்த அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை

 
தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்..

அதானி குழுமத்தின் அதானி என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி தொடர் பங்கு வெளியீடு வெற்றிகரமாக நிறைவு பெற்றபோதிலும், நேற்று அந்நிறுவன பங்கின் விலை நேற்று 28 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.846.30 குறைந்து ரூ.2,128.70ஆக இருந்தது. மேலும் பல அதானி நிறுவனங்களின் பங்குகள் விலையும் சரிவு கண்டது.  அதானி நிறுவனங்களின் பத்திரங்களை மார்ஜின் கடன்களுக்கான பிணையமாக ஏற்றுக் கொள்வதை Credit Suisse நிறுத்தியது என்ற தகவலை அதானி நிறுவனங்களின் பங்கு விலை சரிவுக்கு காரணம்.

மின்சாரம்

2023 ஜனவரியில் நாட்டின் மின்சார பயன்பாடு 13 சதவீதம் அதிகரித்து 12,616 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. மின்சார பயன்பாடு அதிகரித்து இருப்பது, அந்த மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் நீடித்த வேகத்தை குறிக்கிறது என கூறப்படுகிறது. அதேசமயம், வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைளில் மேலும் முன்னேற்றம் போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் மின் பயன்பாடு மற்றும் மின் தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2022 ஜனவரியில் நாட்டின் மின்சார பயன்பாடு  11,180 கோடி யூனிட்களாக இருந்தது.

விமான எரிபொருள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலை நேற்று 4 சதவீதம் உயர்த்தின. தலைநகர் டெல்லியில் எரிபொருள் விலை (ஆயிரம் லிட்டருக்கு) ரூ.4,218 உயர்த்தப்பட்டு ரூ.1,12,356.77ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் முதல் மூன்று முறை விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விமான டிக்கெட் விலையை விமான சேவை நிறுவனங்கள் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

அம்பானி, அதானி விவசாயிகளின் நிலம், பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை மோடி விரும்புகிறார்… ராகுல் காந்தி

போர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலின்படி,  கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்கார இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முகேஷ் அம்பானி 8,430 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்துக்கு முன்னேறினார். அதேசமயம் கவுதம் அதானி 8,390 கோடி டாலர் சொத்து மதிப்புடன் கவுதம்  அதானி 10வது இடத்தில் உள்ளார். ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிவடைந்ததே கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம்.