வர்த்தக துளிகள்.. கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும்- இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ்

 
சக்திகந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், டிஜிட்டல் நாணயத்திற்கு லாபகரமான சூழலை உருவாக்க வங்கிகளின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும் மற்றும் தரவு தனியுரமையில் கவனம் செலுத்த வேண்டும். கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி இழக்க வழிவகுக்கும் என்பதால், அதனை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும்  என தெரிவித்தார்.

நிலக்கரி

ராஜஸ்தான்,  மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் என்.டி.பி.சி. நிறுவனத்திடம் அவர்களுக்கு தேவையான நிலக்கரி தேவையில் 10 முதல் 15 சதவீதத்தை நிலம் மற்றும் கடல் வழியாக பெற்றுக் கொள்ளும்படி மத்திய மின்சார அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதாவது ரயில்-கப்பல்-ரயில் போக்குவரத்து மூலம் எடுத்து செல்லுதல். ரயில்-கப்பல்-ரயில் அமைப்பின் மூலம் நிலக்கரி எடுத்து  செல்லும்போது மின்உற்பத்திக்கான ஒட்டு மொத்த மின்சார செலவு 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று ஒரு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்ந்து 3வது மாதமாக  டிசம்பரிலும் அதிகரித்துள்ளது.  முதல் முறையாக 2022 டிசம்பர் மாதத்தில் நாள் ஒன்று 10 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குதி செய்துள்ளது. கடந்த மாதத்தில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து நாள் ஒன்றுக்கு 11.9 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தி பொதிகள்

மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பருத்தி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், நடப்பு 2022-23 பருவத்தில் நாட்டின் பருத்தி உற்பத்தி குறித்த தனது மதிப்பீட்டை 9.25 லட்சம் பேல்கள் (பொதிகள்) குறைத்து 330.50 லட்சம் பொதிகளாக இந்திய பருத்தி சங்கம் குறைத்துள்ளது. ஒரு பருத்தி பொதி என்பது 170 கிலோ எடை கொண்டதாகும். கடந்த பருவத்தில் பருத்தி உற்பத்தி 307.05 பொதிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.