உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி : சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..

 
சமையல் எண்ணெய்
 

உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலியால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 40 வரை அதிகரித்துள்ளது.

உலக அளவில் சமையலுக்கு பெரும்பாலும்  பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு தான்  அதிகளவில் உற்பத்தி செய்கிறது.  உக்ரைன் நாட்டில்  இருந்துதான் 80 சதவீதம் எண்ணெய் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம்  ஏற்றுமதி செய்யப்படுகிறது.  ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளுவதற்கு முன்பாகவே  சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு சமையல் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக தடை ஏற்பட்டுள்ளது.
 

ரஷ்யா ராணுவம்
ரஷ்யா - உக்ரைன்  போர் தொடங்குவதற்கு  முன்பு வரை 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்  ரூ.140-க்கு விற்பனையானது.  பின்னர் போர் தொடங்கியதும்  எண்ணெய்  விலை படிப்படியாக அதிகரித்து  ஒரு லிட்டர் ரூ.165 முதல் 178 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன்  சில்லரை விற்பனையில்  சமையல் எண்ணெய்  விலை மேலும்  அதிகரித்திருக்கிறது. அதாவது  ஒரு லிட்டர் 196 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  சமையல் எண்ணெய் விலையை போன்றே   பாமாயில் விலையும் கடுமையாக  உயர்ந்திருக்கிறது. ரூ.125-க்கு விற்கப்பட்டு வந்த பாமாயில் 170 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

சூரியகாந்தி எண்ணெய்

ஆனால்  பாமாயில் மலேசியா, இந்தோனேசியா போன்ற  நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.  ரஷ்யா - உக்ரைன்  போர் காரணமாக பாமாயில் ஏற்றுமதியை இந்த நாடுகள் குறைத்துவிட்டன. இதனாலேயே  எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் குடும்பத்தலைவிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.  சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 வரை  உயர்ந்திருப்பதால் அதன் பயன்பாட்டையே  குறைத்து வருகிறார்கள்.  கடைகளிலும்  சமையல் எண்ணெய் விற்பனை கணிசமாக குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.