சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு??.. - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

 
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு??.. -  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைக்க  மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் PF வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்தது. இதுவரை  இல்லாத அளவிற்கு 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.  இது தொலாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான குறைப்பு என நிபுணர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.   கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிஎஃப் வட்டியில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு,  வட்டிக்குறைப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

பி.எப். வட்டி விகிதம்

அதே சமயம்   ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.  பல தனியார் வங்கிகள்  தங்களது ஃபிக்சட் டெபாசிட்  திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.  ஆனால்  சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம்,  ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை விட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிறு சேமிப்புகளையே அதிகம் நாடுவர். ஆகையால்  சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  

கடந்த 2021 டிசம்பர் 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி  சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்து  பரிசீலனை செய்தது.  ஆனால் அப்போது  வட்டி விகிதம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.  தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்ரம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வட்டி விகிதம் உயர்வு

தற்போது  ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களோடு ஒப்பிடுகையில்  சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால்,  அவற்றைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 31ம் தேதி இது தொடர்பான  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறு சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி - 7.1 %,  சுகன்யா சம்ரிதி யோஜனா - 7.6% , மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 7.4 %, தபால் நிலைய சேமிப்பு கணக்கு - 4 %, ரெக்கரிங் டெபாசிட் - 5.8 %, டைம் டெபாசிட் - 5.5 முதல் 6.7 % மற்றும் மாத வருமான திட்டம் - 6.6% ஆகவும் வட்டி விகிதம் இருந்து வருகிறது.