மின்சாரத்திற்கு மாறும் டாடா மோட்டார்ஸ்... முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

 
tata motors

டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்லாண்டு காலமாக ஆட்டோமொபைல் துறையில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வாகனங்களைத் தயாரித்து, அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய வகையில் மலிவான விலையில் வாகனங்களை விற்பனை செய்து சந்தையில் வெற்றி வாகை சூடியது. இப்போதும் சூடிக் கொண்டிருக்கிறது. அதேபோல மாறிவரும் காலத்திற்கேற்ப வாகனங்களில் புது தொழில்நுட்பத்தைப் புகுத்தி வாடிக்கையாளர்களை தக்கவைத்து வருகிறது. இதனால் தான் பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் எப்போதும் உச்சத்தில் இருக்கின்றன.

Tata Motors opens 8 new showrooms in Ahmedabad, Auto News, ET Auto

இது ஒருபுறம் இருக்க எதிர்காலத்தை எதிர்நோக்கி மின்சாரத்தில் இயங்கும் கார்களை (எலக்ட்ரிக்) தயாரிப்பதிலும் டாடா மோட்டார்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல அடுத்தக்கட்ட நகர்வுகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்காக 1 பில்லியன் டாலர் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 7,500 கோடி ரூபாய். அதன்படி டிபிஜி ரைஸ் க்ளைமேட் மற்றும் அதன் இணை நிறுவனம் ஏடிக்யூ நிறுவனத்தோடும் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. 

Tata Nexon EV Price (October Offers!), Images, Review & Colours

இதற்காக Tata Motors EVco என்ற பெயரில் புதிய துணை நிறுவனத்தை உருவாக்கி அதில் முதலீடு செய்யவுள்ளது. இந்நிறுவனத்தில் தான் மேற்கூறிய இரு நிறுவனங்களும் முதலீடு செய்யவிருக்கின்றன. அதேபோல எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜிங் செய்யும் வசதியை எளிதாக்கும் பொருட்டு அதற்கான உட்கட்டமைப்புகளை நிறுவவும் டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக டாடா மோட்டார்ஸின் பங்கு விலை உயர்ந்த வண்ணமே இருந்தது. இந்தப் புதிய அறிவிப்பால் இன்று மட்டுமே 18.57% அளவிற்கு பங்கின் விலை உயர்ந்திருக்கிறது. சந்தை தொடங்கியபோது 462 ரூபாய்க்கு விற்பனையான பங்கு தற்போது 499 ரூபாய்க்கு சென்றிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.