பூமி, நிலவை படம்பிடித்த சந்திரயான்-3 விண்கலம் - புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

 
Chandrayaan 3
சந்திரயான்-3 விண்கலம் பூமி மற்றும் நிலவை படம்பிடித்து அனுப்பிய புதிய
புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் , திட்டமிட்டபடி நிலவை நெருங்கி வருகிறது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்க 40 நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு சுற்றுவட்டப்பாதைகளாக உயர்த்தப்பட்டு தனது 23 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சந்திரயான் 3 தனது பயணத்தில் ஒரு பங்கு பயணத்தை மட்டுமே மிச்சம் வைத்திருக்கிறது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் முக்கிய பணி கடந்த 5ம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்றத்தொடங்கியுள்ளது. 2வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் பூமி மற்றும் நிலவை படம்பிடித்து அனுப்பிய புதிய
புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. 
நிலவில் தரை இறங்கக்கூடிய லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.